அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
அ.தி.மு.க. சார்பில் கோவில்களில் மழை வேண்டி நேற்று சிறப்பு யாகம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.;
ஆறுமுகநேரி,
அ.தி.மு.க. சார்பில் கோவில்களில் மழை வேண்டி நேற்று சிறப்பு யாகம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி-கோவில்பட்டி
தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று அ.தி.மு.க. சார்பில் சிறப்பு யாகம் நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில் நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் ராஜன், அறநிலையத்துறை ஆய்வாளர் பகவதி, நகர அ.தி.மு.க. செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செண்பகமூர்த்தி, வேலுமணி, ஆபிரகாம் அய்யாத்துரை, பழனிகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி சிவன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். யாகத்தை தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம்-திருச்செந்தூர்
ஓட்டப்பிடாரம் உலகாண்ட ஈசுவரி அம்மன் கோவிலில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் பெரியமோகன், கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில் கடற்கரை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஆறுமுகநேரி நகர செயலாளர் அரசகுரு மற்றும் பலர் கலந்துகொண்டனர். 11 கும்பங்கள் வைத்து சிறப்பு யாகம் செய்யப்பட்டது. பின்னர் அந்த புனிதநீர் கடலில் ஊற்றப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்- சாத்தான்குளம்
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. கருங்குளம் ஒன்றிய செயலாளர் செங்கான், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் காசிராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சாத்தான்குளம் வண்டிமலைச்சி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் சந்திரராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஏரல்
ஏரல் சிவன் கோவிலில் நடந்த சிறப்பு யாகத்துக்கு, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் ஆறுமுகநயினார் தலைமை தாங்கினார். ஏரல் நகர செயலாளர் ஆத்திப்பழம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.