மழை பெய்ய வேண்டி பெரம்பலூர்-அரியலூர் கோவில்களில் அ.தி.மு.க.வினர் சிறப்பு யாகம்

மழைபெய்ய வேண்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கோவில்களில் அ.தி.மு.க.சார்பில் சிறப்பு யாகம் நடைபெற்றது.;

Update: 2019-06-22 22:45 GMT
பெரம்பலூர்,

மழைபெய்ய வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என அ.தி.மு.க.வினருக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் அந்தந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகம் நேற்று நடத்தப்பட்டது.

பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற மரகதவள்ளி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளரும், பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), கிருஷ்ணசாமி (வேப்பூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு யாகத்தில் கலந்து கொண்ட கட்சியினர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அரியலூர்

இதே போல் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் அரியலூரில் உள்ள பெருமாள் கோவிலில், மழை பெய்ய வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு யாகம் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தசவதாரம் மண்டபத்தில் அமைக்கப்படடுள்ள யாக சாலையில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டது.

இதையடுத்து சிறப்பு யாகத்தில் கலந்து கொண்ட கட்சியினர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சங்கர், பொருளாளர் அன்பழகன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிவசங்கர், அரியலூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்