திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை கொள்ளேகால் அருகே சம்பவம்

திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொள்ளேகால் அருகே நடந்து உள்ளது.;

Update: 2019-06-22 22:45 GMT
கொள்ளேகால், 

திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால், காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொள்ளேகால் அருகே நடந்து உள்ளது.

உடல் அழுகிய நிலையில்...

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா சத்தேகாலா பகுதியில் உள்ள கவிராய சாமி கோவிலின் அருகே ஒரு வாலிபரும், ஒரு இளம்பெண்ணும் உடல் அழுகிய நிலையில் பிணமாக மிதந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கொள்ளேகால் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபர், இளம்பெண்ணின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொள்ளேகால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காதல் ஜோடி தற்கொலை

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பெயர் கிரண்(வயது 23), இளம்பெண்ணின் பெயர் சங்கீதா(18) என்பதும், இவர்கள் 2 பேரும் காதல் ஜோடி என்றும், 2 பேரும் உகனே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், தெரியவந்தது. மேலும் கிரண், சங்கீதா காதல் பற்றி அறிந்த பெற்றோர் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் மனம் உடைந்த காதல் ஜோடி கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி சத்தேகாலாவுக்கு வந்ததும், பின்னர் 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து கொள்ளேகால் புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்