தேர்தலை சந்தித்தால், கூட்டணி கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் வீரப்பமொய்லி பரபரப்பு பேட்டி

தேர்தலை சந்தித்தால், கூட்டணி கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று வீரப்பமொய்லி கூறினார்.

Update: 2019-06-22 22:45 GMT
பெங்களூரு, 

தேர்தலை சந்தித்தால், கூட்டணி கட்சிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று வீரப்பமொய்லி கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான வீரப்பமொய்லி சிக்பள்ளாப்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கூட்டணி அரசை பாதுகாப்பதே...

காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. அதனால் தான் மக்களிடம் இந்த அரசு பற்றி ஒரு நல்ல கருத்து ஏற்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். கூட்டணி அமைக்காமல், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டிருந்தால், 15 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும். ஜனதா தளம் (எஸ்) கட்சியும் சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்.

இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டிருந்தால், இந்த அளவுக்கு படுதோல்வி ஏற்பட்டிருக்காது. கூட்டணி குறித்து, தொடக்கத்திலேயே எனது எதிர்ப்பை மாநில காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்தேன். இந்த கூட்டணி அரசை பாதுகாப்பதே காங்கிரசின் சாதனையாக உள்ளது. கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெறவில்லை.

காங்கிரசுக்கு பின்னடைவு

இதே நிலை தொடர்ந்தால் வரும் தேர்தல்களில் காங்கிரசுக்கு பின்னடைவு தான் ஏற்படும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது சந்தேகங்கள் எழுந்து வருகிறது. தவறுகள் நடைபெறுவதை நிரூபிக்க வேண்டுமென்றால் பெரிய அளவில் சோதனை ஆராய்ச்சி நடைபெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்று விட்டது.

தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து இரு கட்சிகளும் சுயபரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. கூட்டணி அரசை முன்னாள் பிரதமர் தேவேகவுடா விமர்சிக்கிறார். அவர் காலையில் ஒரு கருத்தை சொல்கிறார், மாலையில் வேறு ஒரு கருத்தை கூறுகிறார். அவர் மாற்றி மாற்றி பேசுகிறார். ஆனால் காங்கிரசார் அவரை போல் பேச மாட்டார்கள்.

மன்னிக்க மாட்டார்கள்

இந்த ஆட்சியை கலைத்துவிட்டு, தேர்தலை சந்தித்தாலும் மக்கள் கூட்டணி கட்சிகளை மன்னிக்க மாட்டார்கள். கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பழங்கள் உள்ள மரத்தை ஆட்டி பார்ப்பது என்பது பா.ஜனதாவினரின் பழக்கம்.

இவ்வாறு வீரப்பமொய்லி கூறினார்.

மேலும் செய்திகள்