ஆற்றில் குளித்தபோது வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கி இறந்த கட்டிட தொழிலாளி - திருவள்ளூரை சேர்ந்தவர்

பழனி அருகே சண்முகநதி ஆற்றில் குளித்தபோது வலிப்பு ஏற்பட்டதால் கட்டிட தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-06-21 22:45 GMT
பழனி, 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள நெச்சூழி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் அஜய் (வயது 20). கட்டிட தொழிலாளி. அஜய்க்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழனி சண்முகநதி ஆற்றுப்பாலத்தின் மராமத்து பணிக்காக அஜய் தனது உறவினர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிக்கு வேலைக்கு வந்தார். அங்கு அவர்கள் பாலத்தில் பராமரிப்பு பணி செய்தனர்.

நேற்றுடன் மராமத்து பணி முடிந்ததால், சம்பளம் பெற்றுக் கொண்டு ஊருக்கு செல்வதற்காக அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சண்முகநதி ஆற்றில் அஜய் தனியாக குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.இதற்கிடையே அஜயை காணவில்லை என அவருடைய உறவினர்கள் தேடினர். இந்நிலையில் மாலையில் ஆற்றில் அஜய் பிணமாக மிதந்தார். இதுகுறித்து அவருடைய உறவினர்கள் பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர்.

விசாரணையில் ஆற்றில் குளித்தபோது, வலிப்பு ஏற்பட்டதால் அவர் நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அஜயின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்