நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், அம்மா ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அம்மா ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவை,
கோவை மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் மகளிருக்காக அம்மா இருசக்கர வாகன திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய ஸ்கூட்டர் வாங்க தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
2018-19-ம் ஆண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 20-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசிநாள் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி ஆகும். இத்திட்டத்தில் ரூ.25 ஆயிரம் மானியம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்ப டும். மாற்றுத்திறனாளிகள் என்றால் ரூ.31 ஆயிரத்து 250 மானியம் வழங்கப்படும்.
இதில் கியர் இல்லாத 125 சி.சி. திறனுக்கு குறைவான ஸ்கூட்டர் வாகனத்தை மட்டுமே வாங்க வேண்டும். அமைப்பு, அமைப்பு சாரா நிறுவனங்கள், வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள், சுய தொழில் செய்யும் பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
இதில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள, ஓட்டுனர் உரிமம் மற்றும் பழகுனர் உரிமம் வைத்து உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மிகவும் பின்தங்கிய பகுதி, மலைப்பகுதி, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை கடந்து திருமணமாகாத பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள் மற்றும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களின் வாகனங்களை கொள்முதல் செய்ய விரும்புபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். அதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற வயது சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் (ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று), ஓட்டுனர் உரிமம், வேலையின் தன்மை மற்றும் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து பெறப்படும் வருமான சான்றிதழ், சுய தொழில் செய்வோர் அதற்கான சுய வருமான சான்றிதழ், கல்விக்கான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண் ணப்பிக்க வேண்டியது இல்லை. தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.