நெல்லையில் அரசு பொருட்காட்சி இன்று தொடங்குகிறது

நெல்லையில் அரசு பொருட்காட்சி இன்று தொடங்குகிறது.;

Update: 2019-06-21 21:30 GMT
நெல்லை, 

நெல்லையில் அரசு பொருட்காட்சி இன்று தொடங்குகிறது.

அரசு பொருட்காட்சி

நெல்லை மாநகராட்சி பொருட்காட்சி திடலில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தலைமை தாங்குகிறார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வரவேற்று பேசுகிறார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர் நன்றி கூறுகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

அரசின் சாதனை விளக்க அரங்குகள்

பொருட்காட்சியில் அரசின் சாதனை விளக்கம் மற்றும் அரசின் நலத்திட்டங்களை பெறுவது எப்படி என்பது பற்றிய அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலா துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, ஊரக வளர்ச்சி துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பத்துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட 28 துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் ஆவின், தாட்கோ, மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட சார்பு நிறுவனங்கள் சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

அரசு பொருட்காட்சி தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர் வரை கண்டுகளிக்கும் வகையில் பொழுது போக்கு அம்சங்கள், ராட்டினங்கள் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்