களக்காட்டில் ஓட்டல்- கடையை உடைத்து கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

களக்காட்டில் ஓட்டல் மற்றும் கடையை மர்மநபர்கள் உடைத்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-06-21 22:15 GMT
களக்காடு, 

களக்காட்டில் ஓட்டல் மற்றும் கடையை மர்மநபர்கள் உடைத்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓட்டலில் கொள்ளை

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள புதூரை சேர்ந்தவர் சேர்மத்துரை என்பவருடைய மகன் கண்ணன் (வயது 41). இவர் களக்காடு அண்ணா சிலை பஜாரில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவரது பக்கத்து கடையில் களக்காடு கீழத்தெருவை சேர்ந்த மோகன் (55) என்பவர் வாட்ச் மற்றும் கைக்கெடிகாரங்கள் விற்பனை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் இருவரும் வழக்கம் போல் கடையை அடைத்துச் சென்றுவிட்டனர். பின்னர் நேற்று காலை கண்ணன் ஓட்டலை திறக்க வந்த போது பின்புற கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மேஜையை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.8,500-ஐ மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது தெரியவந்தது.

இதே போல் மோகனின் கடை மேற்கூரையை உடைத்து அதன் வழியே மர்மநபர்கள் உள்ளே நுழைந்துள்ளதும், ரூ.4,500 ரொக்கப்பணம் மற்றும் ரூ.65 ஆயிரம் மதிப்பிலான கைக்கெடிகாரம் மற்றும் சுவர் கெடிகாரங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டதும் தெரியவந்தது.

போலீசில் புகார்

இச்சம்பவங்கள் பற்றி களக்காடு போலீசில் இருவரும் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்