சீர்காழி அருகே தீ விபத்து: 5 குடிசை வீடுகள் எரிந்து நாசம் ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்

சீர்காழி அருகே தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.;

Update: 2019-06-21 22:30 GMT
சீர்காழி, 

நாகை மாவட்டம், சீர்காழி அருகே புங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வருவக்குடி மெயின்ரோட்டை சேர்ந்த முருகேசன் (வயது 70). இவரது குடிசை வீடு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென அருகில் இருந்த சத்தியசீலன் (28), உத்திராபதி (45), முத்துகுமாரசாமி (27), விஜயபாலன் (24) ஆகியோரின் வீடுகளிலும் பரவியது. இதில் 5 குடிசை வீடுகளும் கொழுந்துவிட்டு எரிந்தது.

தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஆனாலும் குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

இந்த தீ விபத்தில் கிரைண்டர், மின்விசிறி, பீரோ, டி.வி., நகை, உணவு தானியங்கள், துணிகள், புத்தகங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாயின. ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்