தலைவாசல் அருகே கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபரை மதுரையில் விடுவித்த கும்பல்

தலைவாசல் அருகே கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபரை கடத்தல் கும்பல் மதுரையில் விடுவித்தது.;

Update: 2019-06-21 22:00 GMT
தலைவாசல், 

சேலம் மாவட்டம் தலைவாசல் மும்முடி பகுதியை சேர்ந்தவர் கொம்பாட்டி மணி (வயது 58). நிதி நிறுவன அதிபரான இவரை, கடந்த 17-ந்தேதி தலைவாசல் அருகே ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் காரில் கடத்தி சென்றனர்.

இது குறித்து அவரது தம்பி துரைராஜ், தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொம்பாட்டி மணியை தேடி வந்தனர். மேலும், தனிப்படை போலீசாரும் அவரை கடத்தியவர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் துரைராஜின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர், நாங்கள் கேட்கிற பணத்தை கொடுத்தால், உனது சகோதரரை விடுவிப்போம் என்றும், இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவதாக பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த செல்போன் எண் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது, தூத்துக்குடி பகுதியில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

இந்தநிலையில், நிதி நிறுவன அதிபர் கொம்பாட்டி மணியை கடத்தி சென்றவர்கள், நேற்று காலை அவரை மதுரையில் விடுவித்தனர். மேலும், அவரிடம் இருந்த ரூ.13 ஆயிரத்தையும், செல்போனையும் எடுத்துவிட்டு, வெறும் ரூ.350-ஐ மட்டும் கையில் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த மணி, கையில் இருந்த பணத்தை வைத்து மதுரையில் இருந்து கரூருக்கு பஸ்சில் வந்தார்.

மேலும், இதுபற்றிய தகவல் அவரது சகோதரர் துரைராஜிக்கும் தெரிவித்தார். இதையடுத்து அவர் கரூர் சென்று அங்கிருந்த மணியை காரில் அழைத்துக்கொண்டு நேற்று மாலை சேலத்திற்கு வந்தார். பின்னர் மணி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று என்ன நடந்தது? என்பது குறித்தும், 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றதாகவும் போலீசாரிடம் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் தலைவாசலில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

மேலும் செய்திகள்