பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பதை கட்டாயமாக்க புதிய சட்டம் பரமேஸ்வர் தகவல்
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைப்பதை கட்டாயமாக்க புதிய சட்டம் இயற்றப் படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.;
பெங்களூரு,
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைப்பதை கட்டாயமாக்க புதிய சட்டம் இயற்றப் படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
தண்ணீர் பிரச்சினை வராது
பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய பொன் விழா கட்டிடம் பெங்களூருவில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு அந்த கட்டிடத்தை திறந்து வைத்து பேசியதாவது:-
பெங்களூருவில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க, அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும். இதற்காக ஒரு புதிய சட்டம் இயற்றப்படும். இவ்வாறு செய்தால் தண்ணீர் பிரச்சினை வராது. பெங்களூருவில் 1.30 கோடி மக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டியுள்ளது. பெங்களூருவுக்கு காவிரி நீரை தவிர்த்து வேறு எந்த நீர் ஆதாரமும் இல்லை. தற்போது ரூ.5,500 கோடி செலவில் 5-வது கட்ட காவிரி நீர் திட்டம் அமல்படுத்தப்படு கிறது.
திட்ட அறிக்கை
திப்பகொண்டஹள்ளி அணை ரூ.370 கோடி செலவில் சீரமைக்கப்படுகிறது. அத்துடன் எத்தினஒலே திட்டம் மூலம் ரூ.1,300 கோடி செலவில் 2.50 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் கொண்டு வரப்படுகிறது. லிங்கனமக்கி அணையில் இருந்து பெங்களூருவுக்கு தண்ணீர் கொண்டுவருவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன்.
வரும் காலத்தில் பல்வேறு ஆதாரங்கள் மூலம் 10 டி.எம்.சி. தண்ணீர் பெங்களூருவுக்கு கொண்டு வரப்படுகிறது. பெங்களூருவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்யப்படுகிறது. 2050-ம் ஆண்டுக்குள் பெங்களூருவின் மக்கள்தொகை 3.50 கோடியாக அதிகரிக்கும். இவ்வளவு பேருக்கு தண்ணீர் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.