கொள்ளிடம் அருகே ஓலையாம்புத்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கொள்ளிடம் அருகே ஓலையாம்புத்தூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே வடரெங்கம் பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. பின்னர் குழாய்கள் மூலம் குன்னம், பெரம்பூர், ஓலையாம்புத்தூர், கீழமாத்தூர், அரசூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் கொள்ளிடம் அருகே ஓலையாம்புத்தூரில் சாலையோரம் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதனால் குடிநீர் யாருக்கும் பயன்பாடின்றி வீணா கிறது. குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி கொண்டே இருப்பதால் மேற்கண்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர்.
தற்போது குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் இதுபோன்று குடிநீர் வீணாவது வேதனை அளிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குழாய் உடைந்து பல நாட்களாகியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது வரை சீரமைக்காமல் உள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் அங்கு வெளியேறும் குடிநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே, குடிநீர் குழாய் உடைப்பை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.