நாகர்கோவில் மாநகராட்சியில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் ஆணையரிடம், பா.ஜனதாவினர் மனு
நாகர்கோவில் மாநகராட்சியில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆணையர் சரவணகுமாரிடம் பா.ஜனதாவினர் மனு அளித்தனர்.;
நாகர்கோவில்,
நாகர்கோவில் நகர பா.ஜனதா தலைவர் நாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் தேவ், முத்துராமன், மீனாதேவ், ராஜன், அஜித் உள்பட பலர் திரளாக வந்து, மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் தண்ணீர் இல்லாமல் அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே நகரில் 5 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி அடிப்படையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். மேலும் பழுதடைந்த மின்மோட்டார்களை போர்கால அடிப்படையில் சரிசெய்து அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது அவசியம். அனைத்து வார்டுகளிலும் உள்ள குடிநீர் நல்லிகள் மற்றும் பழுதுபட்டு காணப்படும் குழாய்களை சரிசெய்ய வேண்டும்.
அதோடு களியங்காடு மின்வாரிய அலுவலக சாலை, அவ்வை சண்முகம் சாலை, கோட்டார் குறுந்ெதரு, செட்டித்தெரு, ஒழுகினசேரி பறக்கின்கால் பண்டு, பரசுராமன் பெருந்தெரு, லாலா விளை ரோடு, வாகையடி ரதவீதிகள், கிருஷ்ணன்கோவில் சி.எச்.சாலை, பரமேஸ்வரன் தெரு விரிவாக்கம், சரலூர் ேராடு, தட்டான்விளை ரோடு ஆகிய சாலைகளை செப்பனிட வேண்டும்.
மேலும் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறைவடைந்த பல சாலைகளையும் 10 நாட்களுக்குள் சரிசெய்து தருவது அவசியம். இவற்றை செய்ய தவறும்பட்சத்தில் பா.ஜனதா சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.