திருத்துறைப்பூண்டி அருகே கணவருடன், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து சாவு
திருத்துறைப்பூண்டி அருகே கணவருடன், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்களார் மேலத்தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 28). விவசாயி. இவருடைய மனைவி ஜெயா (26). ஜெயாவின் உறவினர் வீடு குடிபோகும் நிகழ்ச்சிக்காக தேவையான பொருட்கள் வாங்குவதற்கு திருக்களாரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு மோட்டார் சைக்கிளில் சங்கரும், ஜெயாவும் சென்றனர்.
அப்போது ஆட்டூர் வீரன் கோவில் அருகே சென்ற போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ஜெயா தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயா உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜெயாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் வாகிஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.