மைசூருவில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்
மைசூருவில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.;
மைசூரு,
மைசூருவில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.
சர்வதேச யோகா தினம்
சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதேபோல, மைசூருவிலும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள குதிரை பந்தய மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது. காலை 7 மணி முதல் 8.30 மணி வரை நடந்தது. இந்த யோகா நிகழ்ச்சியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
இங்கு சூர்ய நமஸ்காரம், தியானம் உள்ளிட்ட பல்வேறு யோகா பயிற்சிகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ், சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி உள்ளிட்ட சில மடங்களின் மடாதிபதிகள், முஸ்லிம் மதகுரு காதி கலிமுல்லா, எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், நாகேந்திரா, மேயர் புஷ்பலதா, கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணா உள்பட பலர் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.
மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி தோல்வி
மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள குதிரை பந்தய மைதானத்தில் யோகாசன நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேரை கலந்துகொள்ள செய்து கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தது. இதற்காக பலமுறை மைசூருவில் யோகா பயிற்சி நடத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது. ஆனால், யோகா நிகழ்ச்சியில் குறைவான மக்களே கலந்துகொண்டனர். கடந்த ஆண்டு நடந்த யோகா நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
நேற்று நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் குடிநீர் வசதி, வாகன நிறுத்த வசதி ஆகியவை செய்து கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. குதிரை பந்தய மைதான பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
அரசு பள்ளிகளில் யோகா
இந்த யோகா நிகழ்ச்சியில் மந்திரி ஜி.டி.தேவேகவுடா பேசியதாவது:-
உலகில் 150 நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகாசனத்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. இதை ஒரு நாள் மட்டும் செய்தால் போதாது, தினமும் தங்களது வீடுகள் அல்லது உடற்பயிற்சி கூடங்களில் செய்ய வேண்டும்.
அரசு பள்ளிகளில் யோகாசனம் கற்றுக்கொடுக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பலத்த பாதுகாப்பு
எந்த தொந்தரவும் இன்றி யோகாசன நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இதையொட்டி குதிரை பந்தய மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.