கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் தேவேகவுடா பரபரப்பு பேட்டி காங்கிரசுக்கு கேள்வி

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்றும், கூட்டணி அரசை தொடர்ந்து நடத்தும் விருப்பம் காங்கிரசுக்கு இருக்கிறதா? இல்லையா? எனவும் கேள்வி எழுப்பி தேவேகவுடா நேற்று பரபரப்பு பேட்டி அளித்தார்.

Update: 2019-06-21 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அரசு நடந்து வருகிறது.

காங்கிரசுக்கு பெரிய இழப்பு

குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதனால் கூட்டணியில் லேசான விரிசல் ஏற்பட்டது. காங்கிரஸ் தோல்விக்கு, ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்தது தான் காரணம் என்று அக்கட்சியின் சில நிர்வாகிகள் பகிரங்கமாகவே கூறினர்.

சமீபத்தில் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணியின் ஒருங்கிணைப்பு தலைவருமான சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அவர், கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் வைக்கப்பட்டுள்ள கூட்டணி தொடர்ந்தால், காங்கிரசுக்கு பெரிய இழப்பு ஏற்படும் என்றும், அதனால் அரசு கவிழ்ந்தால் அதை பற்றி கவலைப்பட தேவை இல்லை என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாயின.

முன்கூட்டியே தேர்தல்

இந்த நிலையில் முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. கூட்டணி அரசை நடத்த வேண்டும் என்ற விருப்பம் காங்கிரசாருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பது புரியவில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் விமர்சிக்கிறார்கள். அவ்வாறு விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?.

இந்த கூட்டணி அரசு எத்தனை நாட்கள் இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இது காங்கிரசின் கையில் தான் உள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் தனது பலத்தை இழந்துவிட்டது என்று பேசுகிறார்கள். இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நாங்கள் ஆட்சியை நடத்தி வருகிறோம்.

பெரும்பான்மை கிடைக்கவில்லை

கடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எடியூரப்பா முதல்-மந்திரி ஆகக்கூடாது, பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் தலைவர்கள் எனது வீட்டிற்கு ஓடி வந்தனர். கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தலாம் என்று கூறினர். ஆட்சி அமைக்க நாங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்கான விருப்பமும் எங்களுக்கு இருக்கவில்லை.

ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மந்திரி பதவிகளில் ஒன்றை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்துள்ளோம். கூட்டணி கட்சியான காங்கிரஸ், ஒரு விதிமுறையையும் பின்பற்றவில்லை. ஆனாலும் நான் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு செல்கிறேன். நாங்கள் இதுவரை கூட்டணி அரசை பற்றி விமர்சித்தது இல்லை.

கூட்டணி தர்மத்தை மீறவில்லை

மல்லிகார்ஜுன கார்கேவை முதல்-மந்திரி ஆக்குங்கள், ஆதரவு தருகிறேன் என்று கூறினேன். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், குமாரசாமிக்கு முதல்-மந்திரி பதவியை விட்டுத்தருவதாக கூறினர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி எப்படி காரணமாக இருக்கும் என்பது எனக்கு புரியவில்லை.

அப்படி ஏதாவது காரணம் இருந்தால் அதை பகிரங்கமாக கூற வேண்டும். உங்கள் கட்சியை பலப்படுத்த நாங்கள் எப்போதும் குறுக்காக இருந்தது இல்லை. ஆயினும் இத்தகைய சந்தேகம் எழுவது ஏன்? நாங்கள் இதுவரை கூட்டணி தர்மத்தை மீறவில்லை. காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ள தொகுதி எங்களுக்கு வேண்டாம் என்று தேர்தலுக்கு முன்பு சொன்னோம். துமகூரு தொகுதியை நாங்கள் கேட்கவே இல்லை. காங்கிரஸ் தோல்வி அடைந்த தொகுதியை தான் நாங்கள் கேட்டோம்.

துமகூருவை விட்டுக்கொடுத்தனர்

மைசூரு தொகுதியை பெறுவதற்காக துமகூரு தொகுதியை விட்டுக்கொடுத்தனர். தேர்தல் முடிவு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அரசியலில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். என்னுடன் இருந்து வளர்ந்து பின்னர் வேறு கட்சிகளுக்கு பலர் சென்றனர். ஆயினும் அதை பற்றி கவலைப்படாமல் நான் கட்சியை நடத்தி வருகிறேன்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

காங்கிரசார் அதிருப்தி

தேவேகவுடாவின் இந்த கருத்து, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேவேகவுடாவின் இந்த கருத்தால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்