செஞ்சிலுவை சங்கம் சார்பில் வேலூர் கோட்டை பூங்கா மைதானத்தில் உலக யோகா தினம் கொண்டாட்டம் கலெக்டர் ராமன் பங்கேற்பு
உலக யோகாதினத்தையொட்டி வேலூர் கோட்டை பூங்கா மைதானத்தில் நேற்று செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் கலந்துகொண்டு யோகா செய்தார்.;
வேலூர்,
5-வது உலக யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில் வேலூர் கோட்டை பூங்கா மைதானத்தில் காலை 7 மணியளவில் உலக யோகாதினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் துணைத்தலைவர் எம்.வெங்கடசுப்பு தலைமை தாங்கினார். சேர்மன் பர்வதா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சி.இந்தர்நாத் வரவேற்றார்.
இதில் கலெக்டரும், செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட தலைவருமான ராமன், அவருடைய மனைவியும், வேலூர் மகளிர் மன்றத்தின் தலைவியுமான தேவி ராமன் ஆகியோர் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.
அதேபோன்று பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர். இதில் கனரா வங்கி முதன்மை மேலாளர் ரேஜி, தொல்பொருள்துறையின் இணை இயக்குனர் ஈஸ்வர், மின்சார வாரிய செயற் பொறியாளர் வின்சென்ட் மற்றும் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். யோகா ஆச்சார்யா அஞ்சுசக்திவேல் யோகா பயிற்சியளித்தார்.
அதேபோன்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை, ஈஷா யோகா சார்பில் உலக யோகாதினம் நடந்தது. இதில் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு யோகாவின் அவசியம் குறித்து பேசினர்.
இதில் 250 போலீசார் கலந்துகொண்டு யோகா செய்தனர்.
இதேபோல மாவட்டம் முழுவதும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் யோகா பயிற்சி நடந்தது. இதில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.
வி.ஐ.டி.யில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு காட்பாடி காந்திநகர் 10-வது பட்டாலியன் என்.சி.சி. கமாண்டிங் அதிகாரி சார்லஸ் தலைமை தாங்கினார். மாணவர் நலன் இயக்குனர் அமீத் மஹேந்தர்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வி.ஐ.டி. பதிவாளர் சத்தியநாராயணன் கலந்துகொண்டார். உடற்பயிற்சி இயக்குனர் தியாகசந்தன், துணை இயக்குனர் மங்கையர்க்கரசி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் என்.சி.சி. மாணவர்கள், வி.ஐ.டி. பணியாளர்கள் கலந்துகொண்டு யோகா செய்தனர்.
என்.சி.சி. மக்கள் தொடர்பு அலுவலர் க.ராஜா, வி.ஐ.டி. என்.சி.சி. அலுவலர் ரவிசங்கர்பாபு சுபேதார் அருண்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.
அதேபோன்று ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர் மஜ்ருல்-உலூம் கல்லூரி ஆகிய இடங்களிலும் உலக யோகாதினம் நடந்தது. இதில் என்.சி.சி. மாணவர்கள் கலந்துகொண்டனர்.