தனுஷ்கோடியில் 55 ஆண்டுகளுக்கு முன்பு, புயலால் கடலில் மூழ்கிய பாலம் தெளிவாக வெளியே தெரிகிறது

55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் கடலில் மூழ்கிய சாலை பாலம் தனுஷ்கோடியில் தெளிவாக வெளியே தெரிகிறது.

Update: 2019-06-20 22:45 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ளது புயலால் அழிந்துபோன தனுஷ்கோடி கடற்கரை. 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் தனுஷ்கோடி வரை சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து வசதி இருந்ததுடன் தனுஷ்கோடி பகுதியில் ரெயில்வே நிலையம், பள்ளிக்கூடம், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன்கூடிய பெரிய தொழில் நகரமாக விளங்கிஉள்ளது.

55 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி வரை கடல் நீரால் சாலை பாதிக்காத வகையில் எம்.ஆர்.சத்திரம்-தனுஷ்கோடி இடையே பெரிய கான்கிரீட் குழாய்கள் அமைத்து கடல் நீர் உள்ளே வந்து செல்லும் வகையில் பாலம் கட்டி சாலைகள் அமைத்துள்ளனர்.

மேலும் 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி ஏற்பட்ட புயல்,கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி நகரம் முழுமையாக அழிந்து போனதுடன் அனைத்து கட்டிடங்களும் மண்ணோடு மண்ணாக போயின.இந்த புயலில் எம்.ஆர்.சத்திரம்-தனுஷ்கோடி இடையே அமைக்கப் பட்டிருந்த சாலைபாலமானது கடலில் அடித்து செல்லப்பட்டு கடல் நீரில் மூழ்கி போனது. புயலுக்கு பிறகு தனுஷ்கோடி பகுதியில் பொது மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்றுவரை மீன்பிடி தொழிலை நம்பியுள்ள மீனவர்கள் மட்டுமே தான் அங்கு தற்காலிகமாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.தற்போது புயலால் அழிந்து போன தனுஷ்கோடி வரை மத்திய அரசால் சாலை அமைக்கப்பட்டு இருபுறமும் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டு உள்ளன.

இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடந்த சில வாரங்களாக வழக்கத்தை காட்டிலும் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன்,கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறது.கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் அரிப்பால் புயலுக்கு முன்பு கட்டப்பட்டு புயலில் சேதமாகி கடலில் மூழ்கிப்போன சாலை பாலம் தற்போது தெளிவாக வெளியே தெரிந்து வருகிறது. கடல் நீர் சென்று திரும்பும் வகையில் அமைக்கப்பட்டதற்கு அடையாளமாக பெரிய கான்கிரீட் குழாய்கள் மற்றும் கற்களுடன் தெளிவாக தெரிந்து வரும் பாலத்தை ஏராளமான மீனவர்களும், சுற்றுலா பயணிகளும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர்.

மேலும் செய்திகள்