நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் மாட்டுச்சாணம் விதான் பவன் விடுதியில் சைவ உணவில் ‘சிக்கன்’ சட்டசபையில் பரபரப்பு குற்றச்சாட்டு
அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் மாட்டுச்சாணம் கிடந்ததாகவும், விதான் பவன் விடுதியில் அதிகாரி ஆர்டர் செய்த சைவ உணவில் சிக்கன் துண்டுகள் கிடந்ததாகவும் நேற்று சட்டசபையில் பரபரப்பு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
மும்பை,
அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் மாட்டுச்சாணம் கிடந்ததாகவும், விதான் பவன் விடுதியில் அதிகாரி ஆர்டர் செய்த சைவ உணவில் சிக்கன் துண்டுகள் கிடந்ததாகவும் நேற்று சட்டசபையில் பரபரப்பு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
‘மட்கி உசல்’
மராட்டிய சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. சட்டசபை நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் வசதிக்காக விதான் பவனில் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதியில் கூட்டுறவுத்துறையை சேர்ந்த சிறப்பு தணிக்கையாளர் மகேஷ் லகே என்பவர் ‘மட்கி உசல்’ என்ற உணவுக்கு (இது மராட்டியர்களின் சைவ உணவுகளில் ஒன்றாகும்) ஆர்டர் செய்தார். அதன்படி விடுதி ஊழியர்கள் அவருக்கு மட்கி உசல் பரிமாறினர். அப்போது, அதில் சிக்கன் துண்டுகளும் கிடந்தன. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் எம்.எல்.ஏ.க்கள் கவனத்துக்கும் சென்றது.
சட்டசபையில் எதிரொலித்தது
இதையடுத்து இந்த பிரச்சினை நேற்று சட்டசபையில் எதிரொலித்தது. இது குறித்து தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் பிரச்சினையை கிளப்பினார். இதற்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்து கூறுகையில், “இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது என்று விதான் பவன் உணவு விடுதி ஊழியர்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள் ளது. மேலும் அந்த விடுதியில் உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது” என்றார்.
மாட்டுச்சாணம்
இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வடேடிவார் எழுந்து, நாக்பூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் மாட்டுச்சாணம் கிடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதற்கு உடனே பதிலளித்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இது ஒரு தீவிர பிரச்சினை. இதில் சம்பந்தப்பட்டவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள், என்றார்.
மராட்டிய சட்டசபையில் நேற்று இந்த பிரச் சினைகள் தொடர்பான விவாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.