கட்சி தலைவர் பதவி ராஜினாமா முடிவில் உறுதி மந்திரி பதவி கேட்டு யாருடைய வீட்டு வாசலுக்கும் செல்லமாட்டேன் எச்.விஸ்வநாத் பேட்டி
மந்திரி பதவி கேட்டு யாருடைய வீட்டு வாசலுக்கும் செல்ல மாட்டேன் என்றும், கட்சி தலைவர் பதவி ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்றும் எச்.விஸ்வநாத் கூறினார்.
பெங்களூரு,
மந்திரி பதவி கேட்டு யாருடைய வீட்டு வாசலுக்கும் செல்ல மாட்டேன் என்றும், கட்சி தலைவர் பதவி ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்றும் எச்.விஸ்வநாத் கூறினார்.
கர்நாடக மாநில ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராஜினாமா முடிவில் உறுதி
கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளேன். பதவியில் நீடிக்குமாறு என்னை தேவேகவுடா வலியுறுத்தி வருகிறார். ஆனால் ராஜினாமா முடிவில் நான் உறுதியாக உள்ளேன். கர்நாடக சட்டசபைக்கு இடைக்கால தேர்தல் வரும் என்று தேவேகவுடா கூறியுள்ளார்.
கடந்த வாரம் அவரை நான் நேரில் சந்தித்து எனது கருத்தை தெரிவித்துள்ளேன். இடைக்கால தேர்தலை சந்திக்க கட்சியை தயார்படுத்த வேண்டியுள்ளது. அதனால் எனது ராஜினாமாவை ஏற்க வேண்டும். எனது ராஜினாமாவை ஏற்காவிட்டால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது குறித்து ஆலோசிக்க வேண்டியதுவரும். முதல்-மந்திரி குமாரசாமிக்கு கட்சியின் மாநில தலைவர் பதவியை வழங்க வேண்டும்.
யாரையும் நியமிக்கவில்லை
இதற்கு முன்பு முதல்-மந்திரிகளாக இருந்த தேவராஜ் அர்ஸ், எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் கட்சி தலைவர்களாகவும் இருந்தனர். கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கி, அதன் மூலம் கட்சியை பலப்படுத்த வேண்டும்.
ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 11 வாரியங்கள் இன்னும் காலியாக உள்ளன. ஒரு மந்திரி பதவியும் காலியாக உள்ளது. வாரியங்களில் எங்கள் கட்சிக்கு 360 இயக்குனர் பதவி கிடைத்துள்ளது. அந்த பதவிகளுக்கு இன்னும் யாரையும் நியமிக்கவில்லை.
அரசியல் அனுபவம்
இன்று (அதாவது நேற்று) தேவேகவுடாவை நேரில் சந்தித்து எனது ராஜினாமாவை ஏற்குமாறு வற்புறுத்துவேன். யாரை வேண்டுமானாலும் எதிர்த்து பேசுவேன். ஆனால் தேவேகவுடாவை நேருக்கு நேர் எதிர்த்து பேசும் சக்தி எனக்கு இல்லை. அவரது அரசியல் அனுபவம், அவர் செய்த உதவிகளுக்கு நான் மரியாதை கொடுக்கிறேன்.
நான் எப்போதும் அவருக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன். கட்சியில் எனது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அரசியலில் எனக்கு அதிகளவில் அனுபவம் உள்ளது. ஆட்சியை நடத்துவது எப்படி என்பதும் எனக்கு தெரியும்.
வீட்டு வாசலுக்கு செல்லமாட்டேன்
மந்திரி பதவி கேட்டு யாருடைய வீட்டு வாசலுக்கும் செல்லமாட்டேன். மந்திரி பதவியை காட்டிலும், குமாரசாமியுடன் இருந்து பிரச்சினைகளுக்கு உதவ வேண்டும் என்று கருதுகிறேன். ஆனால் குமாரசாமி என்னை பயன்படுத்தி கொள்ளவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.
இதற்கு முன்பு காங்கிரசில் இருந்தபோது, சித்தராமையா என்னை புறக்கணித்தார். மாநிலத்தில் கல்வித்துறையை குமாரசாமி உதாசீனப்படுத்துகிறார். இதனால் கல்வித்துறை தலைமை இல்லாமல் தவிக்கிறது. அதிகாரிகளே தர்பார் நடத்துகிறார்கள்.
இலாகா ஒதுக்க வேண்டும்
ஜி.டி.தேவேகவுடா உயர்கல்வித்துறையை நிர்வகித்து வருகிறார். அவர் தனக்கு வேறு துறையை ஒதுக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் வேறு துறையை அவருக்கு கொடுக்கவில்லை. கல்வித்துறைக்கு உடனே மந்திரியை நியமிக்க வேண்டும்.
புதிதாக நியமிக்கப்பட்ட 2 மந்திரிகளுக்கு அலுவலகம் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் இலாகா ஒதுக்கவில்லை. அவர்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்ய முடியும்?. உடனே அவர்களுக்கு இலாகா ஒதுக்க வேண்டும். காங்கிரசில் இருந்து ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சித்தராமையாவின் கோபத்திற்கு ஒரு சமுதாயத்தின் தலைவரை இடைநீக்கம் செய்வது சரியல்ல.
சமூகநீதியை நிலைநாட்டுவதில்...
ஒருவேளை நான் காங்கிரசில் இருந்திருந்தால், எனக்கும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருக்கும். காங்கிரஸ் கட்சி எனது தாயை போன்றது. இப்போதும் அக்கட்சியை தாயாக தான் கருதுகிறேன். கர்நாடகத்தில் சமூகநீதியை நிலைநாட்டுவதில் குறை ஏற்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.
இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார்.