நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் குழப்பம் ஏற்படும் தேவேகவுடா பேட்டி

நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், குழப்பம் ஏற்படும் என்றும், கூட்டணி அரசுக்கு எதிராக பேசுவதை காங்கிரசார் தவிர்க்க வேண்டும் என்றும் தேவேகவுடா கூறினார்.

Update: 2019-06-20 22:30 GMT
பெங்களூரு, 

நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், குழப்பம் ஏற்படும் என்றும், கூட்டணி அரசுக்கு எதிராக பேசுவதை காங்கிரசார் தவிர்க்க வேண்டும் என்றும் தேவேகவுடா கூறினார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பகிரங்கப்படுத்த முடியாது

கர்நாடகத்தில் கூட்டணி அரசு அமைய காரணம் நான் அல்ல. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் விருப்பத்தின் பேரில் தான் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையின்போது, முதல்மந்திரி பதவி காங்கிரசுக்கு கொடுப்பதாக நானே கூறினேன்.

ஆனால் குலாம்நபிஆசாத், குமாரசாமி முதல்மந்திரி ஆகட்டும் என்று கூறினார். அன்று முதல் இன்று வரை இந்த கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. கூட்டணி அரசு அமைந்தபோது, நடந்த நிகழ்வுகள் குறித்த அனைத்து தகவல்களையும் பகிரங்கப்படுத்த முடியாது.

தேர்தலுக்கு தயாராகுங்கள்

எந்த நேரத்திலும் கர்நாடக சட்டசபைக்கு இடைக்கால தேர்தல் வரும் என்று நான் கூறவில்லை. இந்த விஷயத்தில் நான் கூறியதாக வெளியான தகவல் தவறானது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நான் பேசினேன்.

முஸ்லிம்களுக்கு ஜனதா தளம் (எஸ்) அநீதி இழைக்கிறது என்று சொல்வது தவறானது. எங்கள் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் 50 சதவீதம் பேர் முஸ்லிம்கள். அந்த சமுதாயத்திற்கு மந்திரி பதவி வழங்காததற்காக மன்னிப்பு கோருகிறேன்.

கருத்துவேறுபாடு இல்லை

அதே நேரத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஜனதா தளம் (எஸ்) எதுவும் செய்யவில்லை என்று கூறுவது சரியல்ல. எனக்கும், குமாரசாமிக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஊடகங்கள் கற்பனையாக செய்திகளை வெளியிடுகின்றன.

குமாரசாமி என்ன முடிவு எடுப்பதாக இருந்தாலும், அதற்கு முன்பு அவர் என்னிடம் ஆலோசனை கேட்கிறார். எங்கள் கட்சியின் மாநில தலைவர் எச்.விஸ்வநாத் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் கட்சியில் நீடிப்பதாக கூறியிருக்கிறார்.

ராஜினாமா முடிவு வாபஸ்

பதவியில் நீடிக்குமாறு அவரை வலியுறுத்துவோம். இதற்காக பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளேன். இதில் எச்.விஸ்வநாத் ராஜினாமா குறித்து விவாதிப்போம். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் நான் சந்தித்து பேசினேன். அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ராஜினாமா முடிவை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினேன்.

கூட்டணி அரசுக்கு எதிராக சிலர் கருத்து தெரிவிப்பதால், கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றும், இதை காங்கிரசார் தவிர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறினேன். இதை தவிர்த்து வேறு எந்த விஷயம் குறித்தும் நான் பேசவில்லை.

2 வகையான கருத்துகள்

கூட்டணி அரசுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது. சித்தராமையா ஆலோசனைப்படி எங்கள் கட்சி ஒதுக்கீட்டில் இருந்து ஒரு மந்திரி பதவியை சுயேச்சை எம்.எல்.ஏ.வுக்கு வழங்கியுள்ளோம்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மாநில கட்சிகளில் 2 வகையான கருத்துகள் நிலவுகின்றன. பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இடம் பெறாத மாநில கட்சிகள், இவ்வாறு தேர்தல் நடத்துவதை வரவேற்கின்றன.

குழப்பம் ஏற்படும்

ஆனால் அவற்றில் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஒரே நேரத்தில் நடத்துவதால் குழப்பம் ஏற்படும். இது தான் அந்த நோக்கத்திற்கு பின்னடைவு ஆகும். ஒரு வாக்குச்சாவடியில் பல்வேறு மின்னணு வாக்கு எந்திரங்களை வைக்க வேண்டும். இதில் குழப்பம் ஏற்படும் என்பது தான் எனது கருத்து.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்