ஆலங்குளம் அருகே போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டிய தொழிலாளி கைது
ஆலங்குளம் அருகே போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே போலீசாரை அரிவாளை காட்டி மிரட்டிய தொழிலாளி ைகது செய்யப்பட்டார்.
தொழிலாளி
ஆலங்குளம் அருகே நெட்டூரில் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலையில் போலீஸ்காரர் சிவசங்கர் பணியில் இருந்தார். அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த இசக்கி மகன் கூலி தொழிலாளி வேல்முருகன் (வயது 24) மது போதையில் வந்தார். அவர், புறக்காவல் நிலையம் முன்பு நின்ற நாயை காலால் எட்டி உதைத்ததார். அப்போது அந்த நாய் அவரை கடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்த நாயை விரட்டி அடித்தார். இதனை அங்கு இருந்த போலீஸ்காரர் சிவசங்கர் கண்டித்தார்.
போலீஸ்காரருக்கு மிரட்டல்
இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் அரிவாளை காட்டி சிவசங்கரை மிரட்டினார். இதுகுறித்து சிவசங்கர், ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், போலீஸ்காரர் லிங்கராஜ் ஆகியோர் வந்தனர். அப்போது அங்கு வந்த வேல்முருகன் மீண்டும் அரிவாளை காட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், போலீஸ்காரர்கள் லிங்கராஜ், சிவசங்கர் ஆகிய 3 பேரையும் மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.
கைது
இதையடுத்து அப்பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் பதுங்கி இருந்த வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். வேல்முருகன் ஏற்கனவே அப்பகுதியில் உள்ள கடையின் முன்பிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்த வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.