களக்காடு அருகே பாலம் அமைக்க குழி தோண்டியபோது 3 அடி உயர முருகர் கற்சிலை கண்டெடுப்பு

களக்காடு அருகே பாலம் அமைக்க குழி தோண்டியபோது, 3 அடி உயர முருகர் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2019-06-20 22:00 GMT
களக்காடு, 

களக்காடு அருகே பாலம் அமைக்க குழி தோண்டியபோது, 3 அடி உயர முருகர் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

முருகர் சிலை கண்டெடுப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேலவடகரை-கீழப்பத்தை இடையே பச்சையாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு நேற்று முன்தினம் இரவில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி நடந்தது.

அப்போது ஆற்றில் புதைந்து இருந்த சுமார் 3 அடி உயரமுள்ள பழங்கால முருகர் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. முருகபெருமான் மயில் வாகனத்தில் அமர்ந்து இருப்பது போன்று அந்த கற்சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. முருக பெருமானின் வலது கரம் சற்று சேதம் அடைந்த நிலையில் இருந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து முருகர் சிலையை பார்த்து வழிபட்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து களக்காடு போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

முருகர் கற்சிலை எந்த கோவிலில் இருந்தது?, அது சேதம் அடைந்த நிலையில் இருந்ததால் ஆற்றில் வீசிச் சென்றனரா?, அல்லது கோவிலில் இருந்து கடத்தி வரப்பட்ட சிலையை போலீசாருக்கு பயந்து ஆற்றில் வீசிச் சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் பாலம் அமைக்க குழி தோண்டியபோது முருகர் கற்சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்