பஸ் நிலையங்களில் அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தம் பயணிகள் அவதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களில் அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2019-06-20 22:45 GMT
கறம்பக்குடி,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால், பஸ் நிலையங்களில் அம்மா குடிநீர் விற்பனை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பஸ் நிலையங்களில் ஒரு லிட்டர் அம்மா குடிநீர் ரூ.10 என்ற குறைந்த விலையுடன் விற்கப்படுகிறது. இதற்கென பஸ் நிலையங்களில் தனிஇடத்தில் அமைக்கப்பட்டு போக்குவரத்து ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.25-க்கு விற்பனை செய்து வரும் நிலையில், தமிழக அரசால் ரூ.10 விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், அம்மா குடிநீர் பாட்டிலுக்கான தேவையும் அதிகரித்தது. பயணிகள் பலரும் தாகம் தீர்க்க அம்மா குடிநீர் பாட்டிலை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.

விற்பனை நிறுத்தம்

ஆனால், கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகளிலும் உள்ள பஸ் நிலையங்களில் அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் மட்டும் அவ்வப்போது குடிநீர் பாட்டில்களை ஊழியர்கள் விற்பனை செய்கின்றனர். அதுவும் கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மலிவு விலையில் அரசால் வழங்கப்பட்ட சுத்திகரிக்கட்ட குடிநீர் பாட்டில் விற்பனை நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையங்களில் உள்ள தரமற்ற குடிநீர் பாட்டில்களை அதிக விலை கொடுத்து பொதுமக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னையில், ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் தட்டுப்பாடே அம்மா குடிநீர் பாட்டில் வினியோகம் நிறுத்தப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுடையதாக இருந்த அம்மா குடிநீர் பாட்டில்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்