ஆத்தூரில் பண இரட்டிப்பு மோசடி கும்பலிடம் ரூ.6 லட்சம் பறிமுதல் பெண் உள்பட 4 பேர் கைது

ஆத்தூரில் பண இரட்டிப்பு மோசடி கும்பலை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-06-20 22:15 GMT
ஆத்தூர், 

ஆத்தூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி, அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த காரை சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 27) என்பவர் ஓட்டி வந்ததும், காரில் ரூ.6 லட்சம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். அப்போது அருண்குமார் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதன் மூலம் அவரை பின்தொடர்ந்து மற்றொரு கார் வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் செல்போனில், அருண்குமார் போல பேசினர். அப்போது காரில் 3 பேர் கொண்ட கும்பல் வருவது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார், அந்த காரை செல்லியம்பாளையம் வரக்கூறினர். இதே போல அந்த காரும் வந்தது. காரில் வந்த ஒரு பெண் உள்பட 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சி காமராஜர் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (36), தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த பிரதீப் (42), ஆத்தூர் அருகே உள்ள புத்தர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மேனகா (28) என்பதும், இவர்கள் பண இரட்டிப்பு மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் வாழப்பாடியை சேர்ந்த வெற்றிவேல் என்பவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்தால், ஒரு மாதத்தில் ரூ.2 லட்சம் தருவதாக ஆசைவார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து வெற்றிவேல் கொடுத்த புகாரின் பேரில், அருண்குமார், சதீஷ்குமார், பிரதீப், மேனகா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 10 ஆயிரமும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கும்பல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி செய்து வந்தது. அதற்கு மேனகாவை போனில் கனிவாக பேச சொல்லி, மயக்கி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் ஏமாந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்