சுற்றுச்சூழல் தூய்மையில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடம் அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்

சுற்றுச்சூழல் தூய்மையில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

Update: 2019-06-20 23:00 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் கலந்துரையாடல் நடந்தது. இதில் தொழிற்சாலை நிர்வாகிகளுடன் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அமைச்சர் கே.சி.கருப்பணணன் கலந்துரையாடினார்.

இதில் ஏராளமான கம்பெனிகளில் இருந்து வந்திருந்தவர்கள் தங்களது நிறை, குறைகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, ‘தங்களது குறைகள் மீதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கம்பெனிகளின் சார்பில் இடம் கொடுத்தால் அரசு செலவிலேயே எவ்வளவு மரக்கன்றுகள் வேண்டுமானாலும் நட்டு தரப்படும். அதனை நீங்கள் தண்ணீர் விட்டு வளர்த்தால் மட்டும் போதும்.

இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் தூய்மையில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு 85 மதிப்பெண்கள் கொடுத்து மத்திய அரசு கவுரவித்துள்ளது’ என்று தெரிவித்தார். பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மாசு ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் புரளியை கிளப்பி வருகின்றன. வேண்டும் என்றே அரசு மீது பழி சுமத்துவது அவர்களின் வேலையாகி விட்டது. சீமான், கமல் போன்றோர் பேசுவதால் யாருக்கு என்ன பயன்?. இவர்கள் பேசி நாட்டுக்கு என்னவாக போகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக மகேந்திரா சிட்டியில் மரக்கன்றுகளை அமைச்சர் நட்டு வைத்தார். விழாவில் அரசு அதி காரிகள், அ.தி. மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்