ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த முதியவருக்கு ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இல்லை

ஜிப்மரில் தனி வார்டில் சிகிச்சை பெற்றுவந்த முதியவருக்கு ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இல்லை என புனேவில் உள்ள நச்சு நுண்ணுயிரியல் ஆய்வக முடிவில் தெரியவந்துள்ளது.

Update: 2019-06-20 22:00 GMT
புதுச்சேரி, 

கேரள மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த ‘நிபா’ வைரஸ் அருகிலுள்ள பிற மாநிலங்களுக்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி புதுவை மாநிலத்தில் தீராத காய்ச்சலுடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல் ‘நிபா’ வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக கோரிமேடு அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா செட்டிகட்டளை பெரிய தெருவை சேர்ந்த சேர்ந்த ராமலிங்கம் (வயது 75) என்பவர் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவூர் என்ற இடத்தில் பணியாற்றி வந்தார். அவரை கடந்த 10-ந்தேதி பாம்பு கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக திருவூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக தெரிகிறது.

அதன்பின் சொந்த ஊருக்கு திரும்பி ராமலிங்கம் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தநிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள நச்சு நுண்ணுயிரியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் அவருக்கு ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது.

மேலும் செய்திகள்