அரசின் வளர்ச்சித் திட்டப்பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்
அரசின் திட்டப்பணிகளை அதிகாரிகள் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.
காரைக்கால்,
ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கந்தசாமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா, துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட நலத்துறை சார்பில், காரைக்காலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தையும் காலதாமதம் இன்றி முடிக்கவேண்டும். எந்த வேலை தாமதமாக இருந்தாலும், அதனை எனது கவனத்திற்கு கொண்டுவந்து விரைவில் நிறைவேற்றவேண்டும். பொதுமக்களுக்கான திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடைய கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி விரைந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.