சர்வதேச யோகா தினத்தையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் யோகா நிகழ்ச்சி 500 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

சர்வதேச யோகா தினத்தையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் யோகா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் 500 மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2019-06-20 23:00 GMT
தஞ்சாவூர்,

உலகம் முழுவதும் இன்று(வெள்ளிக்கிழமை) சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் பல்வேறு சுற்றுலா தலங்களில் கடந்த 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 1 வார காலம் யோகாவின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையிலும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் யோகாவின் அவசியத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை பெரிய கோவிலில் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு யோகாசன நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

இதில் இந்திய சுற்றுலாத்துறை சென்னை உதவி இயக்குனர் பாஸ்வான், சுற்றுலா தகவல் அலுவலர் ராஜ்குமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, தஞ்சை பெரிய கோவில் செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈஷா யோகா மையத்தை சேர்ந்த கல்யாண்குமார், பெவின்சந்தர் ஆகியோர் யோகாசனம் செய்து காண்பித்தனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் பனியன், தொப்பி, காலை உணவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்