திருப்பூரில் வாலிபரை தாக்கிய ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் போலீஸ் கமிஷனர் நடவடிக்கை

திருப்பூரில் வாலிபரை தாக்கிய போலீஸ் ஏட்டை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் நடவடிக்கை மேற்கொண்டார்.

Update: 2019-06-20 23:00 GMT
திருப்பூர், 

திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிப்பாளையம் ஜெயலலிதா நகரை சேர்ந்த சரவணன்(வயது 32) மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று காலை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கமிஷனர் சஞ்சய்குமாரிடம் சரவணன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். கடந்த 17-ந் தேதி இரவு எனது வீட்டுக்கு அருகே உள்ள கோவில் முன்புறம் நின்று கொண்டிருந்தேன். அப்போது வேனில் வந்த வீரபாண்டி போலீஸ் ஏட்டு கவுரிசங்கர் என்னை தடியால் தாக்கினார். எதற்காக என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு என்னை மேலும் அடித்ததுடன் காலால் எட்டி உதைத்தார். பின்னர் வேனில் ஏற்றி, வீரபாண்டி காளிகுமாரசாமி கோவில் அருகே இறக்கி விட்டு சென்று விட்டார்.

வீட்டுக்கு நடந்து வந்த நான், 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல தயாரான போது மீண்டும் அங்கு வந்த ஏட்டு கவுரிசங்கர் என்னை தாக்கியதுடன், டாக்டரிடம் போலீஸ் அடித்ததாக கூறினால் பொய் வழக்கு போடுவேன் என்று கூறி மிரட்டினார்.

இதனால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து விட்டேன். எந்த குற்றமும் செய்யாத என்னை தாக்கிய போலீஸ் ஏட்டு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்துமாறு துணை கமிஷனர் உமாவுக்கு, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டு கவுரிசங்கரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் நேற்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்