பல்லடத்தில் 2 வீடுகளில் திருட்டு: மர்ம ஆசாமிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
பல்லடத்தில் 2 வீடுகளில் திருடிய மர்ம ஆசாமிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்லடம்,
பல்லடம் அருகே வடுகபாளையம் மகாலட்சுமி அவென்யூவை சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் ராஜேஷ்கண்ணா என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம ஆசாமிகள் உடைத்து அங்கிருந்து 25 பவுன்நகை மற்றும் ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
அதே போல் பல்லடம் துரைசாமி நகரை சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் பிரகாஷ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 6 பவுன்நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த 2 சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து பல்லடம் போலீசார் சம்பவம் நடந்த 2 வீடுகளுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர். பட்டப்பகலில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின் பேரில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் கட்டமாக திருட்டு நடைபெற்ற எல்.ஐ.சி.முகவர் ராஜேஷ் கண்ணா என்பவர் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது 50 வயது மதிக்கதக்க சிவப்பு நிற சட்டை அணிந்த மர்ம ஆசாமி ஒருவர், கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வருவதும், பின்னர் அவர் அங்கிருந்து திரும்பி செல்வதும் கேமராவில் பதிவாகி உள்ளது. பின்னர் எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் பிரகாஷ் என்பவர் வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கேமராவில், ராஜேஷ் கண்ணா வீட்டில் திருடிய அதே ஆசாமி, அதே மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக செல்வதும் அப்போது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் வெள்ளை நிறத்தில் சட்டை அணிந்த மற்றொரு ஆசாமி அமர்ந்து இருப்பதும் பதிவாகி உள்ளது. எனவே இருவரின் வீடுகளிலும் திருடியது இந்த ஆசாமிகள்தான் தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.