அரசு பஸ் டிரைவரை அரிவாளால் வெட்டி நகை-பணம் பறிப்பு கோவில்பட்டி அருகே மர்மநபர்கள் துணிகரம்

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்ற அரசு பஸ் டிரைவரை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-06-20 22:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மனைவியுடன் சென்ற அரசு பஸ் டிரைவரை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு பஸ் டிரைவர்

கோவில்பட்டி பாரதிநகர் மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி செல்லம்மாள் (37).

தற்போது கயத்தாறு அருகே உள்ள புதுக்கோட்டையில் முருகேசன் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் அந்த வீட்டின் கட்டுமான பணிகளை பார்ப்பதற்காக கணவன், மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அவர்கள் இரவு 10 மணியளவில் கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

அரிவாள் வெட்டு

கோவில்பட்டி அருகே உள்ள சாலைபுதூரில் வந்தபோது, அங்கு நின்ற மர்மநபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி செல்லம்மாள் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை கேட்டனர். அதற்கு அவர் மறுத்ததால், அவர்கள் தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் முருகேசனை வெட்டினர். இதில் அவருக்கு கண் அருகே வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து செல்லம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலி, முருகேசன் வைத்து இருந்த ரூ.6 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து முருகேசன் நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதற்கிடையே, சம்பவ இடத்தை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மனைவியுடன் சென்ற அரசு பஸ் டிரைவரை அரிவாளால் வெட்டி நகை, பணத்தை மர்மநபர்கள் பறித்து சென்ற துணிகர சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்