விக்கிரவாண்டியில், ரெயில்வே நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்

விக்கிரவாண்டியில் ரெயில்வே நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-06-20 22:45 GMT
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி ரெயில் நிலையத்தின் அருகில் மேலக்கொந்தை பகுதியில் ரெயில்வே கேட் இருந்தது. இங்குள்ள தண்டவாள பகுதியை ரெயில்கள் கடந்து செல்வதற்காக கேட்டை மூடிவிட்டு பின்னர் ரெயில்கள் சென்றதும் கேட் திறக்கப்படும்போது போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே கேட்டுக்கு மாற்று ஏற்பாடாக கடந்த ஆண்டு ரூ.11 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டது. ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து மேலக்கொந்தை ரெயில்வே கேட் மூடப்பட்டது.

தற்போது அந்த இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக ரெயில்வே பாதையை கடந்து செல்ல ஏதுவாக ரூ.3 கோடி மதிப்பில் நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேற்று சென்னை ரெயில்வே கட்டுமான பணி தலைமை அதிகாரி அசோக்குமார், தாம்பரம் துணை கட்டுமான பணி அதிகாரி ஜெய்சங்கர் ஆகியோரின் மேற்பார்வையில் ரெயில்வே நடைபாதை மேம்பாலத்திற்காக தலா 20 டன் எடையுள்ள 2 ராட்சத இரும்புத்தூண்களை ‘கிரேன்’ மூலம் பொருத்தும் பணி நடந்தது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த பணி நேற்று பகல் 12 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடந்தது. இதன் காரணமாக தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. அதேபோல் மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு இயக்கப்பட வேண்டிய பயணிகள் ரெயில் பேரணி- விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டு மேல்மருவத்தூர்- பேரணி வரை இயக்கப்பட்டது. மேலும் விழுப்புரத்தில் இருந்து மேல்மருவத்தூருக்கு இயக்கப்பட வேண்டிய பயணிகள் ரெயில் விழுப்புரம்- பேரணி இடையே ரத்து செய்யப்பட்டு பேரணியில் இருந்து மேல்மருவத்தூர் வரை இயக்கப்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிந்தவுடன் சிமெண்டு தளம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

மேலும் செய்திகள்