தேசிய தகுதித்தேர்வு எழுத காலதாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுப்பு
தேசிய தகுதித்தேர்வு எழுத காலதாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வேலூர்,
பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படுகிற தேசிய தகுதித் தேர்வு வேலூர் மாவட்டத்தில் நேற்று நடந்தது. இதற்காக வேலூர் சேண்பாக்கம் ரெயில்வே கேட் அருகே உள்ள ஒரு மையம் அமைக்கப்பட்டது. சென்னை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வர்கள் தேர்வு எழுத வந்தனர். 9 மணி வரை தேர்வர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இ்ந்தநிலையில் தேர்வு எழுத சுமார் 10 பேர் காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் காவலாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது:-
தேர்வு மையம் அமைந்துள்ள இடம் குறித்து ஹால்டிக்கெட்டில் சரியாக குறிப்பிடவில்லை. தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணையும் அதில் குறிப்பிடவில்லை.
நாங்கள் தொலைவில் இருந்து வருகிறோம். முகவரியை விசாரித்து வர காலதாமதமாகி விட்டது. இதற்கு முன் இதேபோன்ற தேர்வு எழுதியபோது 9.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். முகவரி பிரச்சினையால் நாங்கள் காலதாமதமாக வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.