மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
வக்கீலை தகாத வார்த்தைகளால் திட்டிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்,
நாமக்கல் சிவில் வக்கீல்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருபவர் ராவணன். இவர் வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டம் தொட்டியம் போலீஸ் நிலையம் சென்று உள்ளார். அங்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா என்பவருக்கும், இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வக்கீல் ராவணனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்தும், அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி என மாவட்டம் முழுவதும் சுமார் 1000 வக்கீல்கள் நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் கோர்ட்டில் வழக்கமாக நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டன.
தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற இருப்பதாக வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.