வெண்ணந்தூர் பகுதியில் ரேஷன் கடைகளில் கலெக்டர் ஆய்வு

வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

Update: 2019-06-20 23:15 GMT
வெண்ணந்தூர், 

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார். வெண்ணந்தூர் அடுத்து, வடுகம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் ரேஷன் கடையினை பார்வையிட்ட கலெக்டர், பொருட்களின் இருப்பு, விற்பனை, மீத இருப்பு, விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை அதிநவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) இயக்கி அதனடிப்படையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்எண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார்.

தொடர்ந்து ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கடன் சங்கத்திற்குட்பட்ட வெண்ணந்தூர்-2 ரேஷன் கடை, அ.விநாயகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் அலவாய்பட்டி-1 ரேஷன் கடை, அ.ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் அ.ஆயிபாளையம் ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பினை மாவட்ட வழங்கல்துறை அலுவலர்களின் துணையுடன் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் சரிபார்த்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரா, ராசிபுரம் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரம், பறக்கும் படை துணை தாசில்தார் சரவணன் உள்பட வழங்கல் துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

வெண்ணந்தூர் பேரூராட்சியில் வெண்ணந்தூர் ஏரியினை மேம்பாடு செய்தல் பணியினை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பார்வை யிட்டார். வெண்ணந்தூர் பேரூராட்சியில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் வெண்ணந்தூர் ஏரி கரையினை வலுபடுத்தி கரையின் உட்பகுதியில் சிமெண்டு ஸ்லேப்கள் அமைத்து மேம்பாடு செய்தல் பணியினையும், கரையின் மேற்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பாதை அமைக்கப்பட்டு வரும் பணியினையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது உதவி இயக்குனர் (பேரூராட்சி) முருகன், உதவி செயற்பொறியாளர் மோகன், வெண்ணந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு உட்பட பேரூராட்சி அலுவலர்கள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்