யாதகிரி மாவட்டம் சன்டரகி கிராமத்தில் இன்று தொடக்கம் குமாரசாமியின் கிராம தரிசன திட்டம்
யாதகிரி மாவட்டம் சன்டரகி கிராமத்தில் முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வெள்ளிக்கிழமை) கிராம தரிசனம் திட்டத்தை தொடங்குகிறார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் உள்ள கிராமங்களை வளர்ச்சி அடைய வைக்கும் நோக்கில் முதல்-மந்திரி குமாரசாமி கிராம தரிசனம் திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளார்.
கிராம தரிசனம்
இவர் ஏற்கனவே கடந்த 2007-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தபோது, கிராம தரிசன திட்டத்தை தொடங்கினார். கிராமங்களில் ஏதாவது ஒரு வீட்டில் தங்கி, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டு அதற்கு தீர்வு கண்டார். இது மக்களிடையே வரவேற்பை பெற்றது. சுமார் 45 கிராமங்களில் அவர் தங்கினார்.
இந்த நிலையில் குமாரசாமி கர்நாடக முதல்-மந்திரியாக 2-வது முறையாக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்றார். அவர் மீண்டும் கிராம தரிசன திட்டத்தை தொடங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஓராண்டு ஆகியும், உடல்நிலை காரணமாக அவர் கிராம தரிசன திட்டத்தை தொடங்காமல் இருந்தார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதற்கிடையே கூட்டணி ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், வடகர்நாடகத்தை குமாரசாமி புறக்கணித்து வருவதாகவும் பா.ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர்.
இதனால் வடகர்நாடக பகுதி மக்களை கவரும் வகையில் வடகர்நாடக பகுதியில் கிராம தரிசனத்தை நடத்த குமாரசாமி முடிவு செய்தார். இதைதொடர்ந்து கிராம தரிசன திட்டத்தை ஜூன் மாதம் 21-ந் தேதி (அதாவது இன்று) தொடங்குவதாக குமாரசாமி அறிவித்தார்.
இன்று தொடங்குகிறார்
அதன்படி யாதகிரி மாவட்டம் குருமித்கல் தாலுகாவில் உள்ள சன்டரகி கிராமத்தில் குமாரசாமி இன்று (வெள்ளிக்கிழமை) தனது கிராம தரிசன திட்டத்தை தொடங்குகிறார்.
இன்று காலை 10 மணிக்கு அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் அந்த கிராமத்திற்கு செல்லும் குமாரசாமி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெறுகிறார். சில பிரச்சினைகளுக்கு அங்கேயே தீர்வு காண நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.
குறைகளை கேட்கிறார்
நாள் முழுவதும் குறைகளை கேட்கும் குமாரசாமி, இன்று இரவு அங்குள்ள அரசு உயர் தொடக்கப்பள்ளியில் தங்குகிறார். நாளை (சனிக்கிழமை) கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகாவில் உள்ள ஹெரூர் கிராமத்திற்கு செல்கிறார். அங்கும் மக்களின் குறைகளை கேட்கிறார்.
குமாரசாமி வருவதையொட்டி அந்த கிராமங்களில் புதிதாக சாலைகள் போடப்பட்டுள்ளன. அவர் தங்கும் பள்ளிகள் பராமரிக்கப்பட்டு பளிச்சென்று காட்சி அளிக்கின்றன. சரியான சாலை வசதி இல்லாமல் இருந்த அந்த கிராமங்களில் சாலைகள் புதுப்பிக்கபட்டு, புதுப்பொழிவுடன் காட்சி அளிக்கின்றன.
பலத்த பாதுகாப்பு
முதல்-மந்திரி வருகையையொட்டி அந்த கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் முதல்-மந்திரியின் கிராம தரிசனத்தையொட்டி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதால் சன்டரகி, ஹெரூர் கிராமங்களை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.