போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் குழந்தை திருமணம் நடைபெறுவது அதிகரித்துக் கொண்டே உள்ளது கலெக்டர் வேதனை
மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் நடைபெறுவது அதிகரித்துக் கொண்டே உள்ளது என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வேதனையடைந்து உள்ளார்.
திருவண்ணாமலை,
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் குழந்தை திருமணம் நடைபெறுகிறது. முகூர்த்த நாட்களில் குழந்தை திருமணம் நடைபெறுவது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குழந்தை திருமணம் நடைபெறுவது அதிகரித்துக் கொண்டே உள்ளது.
குழந்தை திருமணம் செய்வதால் கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடையாத காரணத்தினால் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும், எடைகுறைவான குழந்தை பிறக்கவும் தாய் சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக படிக்கும் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வி அறிவு தடைப்பட்டு தன்னம்பிக்கை குறைவு, படிப்பறிவு, பொது அறிவு குறைவு போன்றவை ஏற்படுகிறது. இதனால் பாலியல் ரீதியான பிரச்சினைகள், கணவன், மனைவி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளது. கணவன், மனைவிக்கிடையே வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இளம் விதவைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பெண்ணிற்கு 18 வயதும், ஆணிற்கு 21 வயதும் நிறைவடையாத நிலையில் நடைபெறும் திருமணம் குழந்தை திருமணம் ஆகும். குழந்தை திருமண தடை சட்டத்தின்படி குழந்தை திருமணம் என்பது குற்றம், பிணை ஆணை வழங்கா குற்றமாகும். குற்றம் புரிந்தவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டுமே உண்டு. 18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்து கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் குற்றவாளி ஆவார். அதுபோல 21 வயது நிறைவடையாத ஆண் மகனை திருமணம் செய்யும் பெண்ணும் குற்றவாளியாவார்.
குழந்தை திருமணம் நடத்தியவர், நடத்த தூண்டியவர் அனைவரும் குற்றவாளிகள். இந்த பெண் குழந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பெற்றோர்கள் அல்லது காப்பாளர் மற்றும் குழந்தைத் திருமணத்தை ஏற்பாடு செய்த, அனுமதித்த, பங்கேற்ற மற்றும் அந்த திருமணத்தை தடுக்க தவறிய எந்த நபரும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக முன்கூட்டியே தகவல் அறிந்தால் பொதுமக்கள் அதுபற்றி உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலகம், போலீஸ் நிலையம் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பது விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.