செல்வமகள் திட்டத்தில் 5,822 பேர் இணைந்துள்ளனர் தபால்துறை மாவட்ட கண்காணிப்பாளர் பேட்டி
செல்வமகள் திட்டத்தில் கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 822 பேர் இணைந்துள்ளனர் என்று மாவட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் கூறினார்.
ஆரணி,
ஆரணி, தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலைய வளாகத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகத்தை தபால்துறை மாவட்ட கண்காணிப்பாளர் எல்.சந்திரசேகரன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஜனவரி 27-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி ஆரணி தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இதுவரைஆரணியில் மட்டும் 786 பேர் பாஸ்போர்ட் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
ஆரணி, திருவண்ணாமலை பாஸ்போர்ட் சேவை மையங்களில் புதிய பாஸ்போர்டுகளை பதிவு செய்யலாம், பழைய பாஸ்போர்டுகளை புதுப்பிக்கலாம், திருத்தங்களும் செய்து கொள்ளலாம். கடந்த காலங்களில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டன. தற்போது தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே பாஸ்போர்ட் சேவை மையமாக தபால்துறை செயல்பட்டு வருகிறது.
100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தபால்துறை மூலமாக பணப்பட்டுவாடா செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 132 பேர் சேமிப்பு கணக்கு தொடங்கி உள்ளனர். அதேபோல முதியோர் உதவித்தொகை பெறுபவர்களும் பயன்பெறும் வகையில் சேமிப்பு கணக்குகள் மூலமாக பணம் வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
செல்வமகள் திட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 5 ஆயிரத்து 822 பேர் இணைந்துள்ளனர். தபால் துறையில் தற்போது ஆயுள்காப்பீட்டு முறையும், கிராமிய அஞ்சல்துறை மூலமாகவும் காப்பீடு திட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
கிராமிய அஞ்சல் சேவை திட்டம் மூலமாக 1,113 பேர் பாலிசிகள் பெற்றுள்ளனர். இதன்மூலம் ரூ.60 கோடி வரை வணிகம் நடந்துள்ளது. அதிவிரைவு தபால் பட்டுவாடா மூலம் 3 லட்சத்து ஆயிரத்து 8 பேர் கடந்த ஆண்டில் தபால் அனுப்பி உள்ளார்கள்.
இன்று தனியார் வங்கிக்கு இணையாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் என தபால் துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதன்மூலம் மணியார்டர், மின்கட்டணம் கட்டுவதற்கு, கியாஸ் மானியம் பெறுவதற்கும் இந்த சேமிப்பு கணக்குகள் முழுமையாக செயல்பட்டு வருகிறது.
‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தில் தங்களது குழந்தைகள் புகைப்படத்தையே ஸ்டாம்பாக வெளியிடும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உதவி கோட்ட கண்காணிப்பாளர் பி.பிரதீபா, தலைமை தபால் நிலைய அலுவலர் எஸ்.சரஸ்வதி, கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.