கம்யூனிஸ்டு தலைவர் மகன் மீதான கற்பழிப்பு வழக்கு: மும்பை போலீஸ் கேரளா விரைந்தது

கம்யூனிஸ்டு தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் மீதான கற்பழிப்பு வழக்கு விசாரணைக்காக மும்பை போலீசார் 2 பேர் கேரளா சென்றனர்.

Update: 2019-06-19 22:45 GMT
மும்பை,

கம்யூனிஸ்டு தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் மீதான கற்பழிப்பு வழக்கு விசாரணைக்காக மும்பை போலீசார் 2 பேர் கேரளா சென்றனர்.

கற்பழிப்பு வழக்கு

மும்பையில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த 33 வயது பெண் கடந்த 2009-ம் ஆண்டு துபாயில் உள்ள டான்ஸ் பாரில் வேலை பார்த்தார். அப்போது அந்த பெண்ணுக்கு கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் தொழில் அதிபர் பினாய் பாலகிருஷ்ணனின் அறிமுகம் கிடைத்தது.

பின்னர் அவர் திருமணம் செய்வதாக கூறி தன்னை கற்பழித்ததாக, அந்த பெண் பினாய் பாலகிருஷ்ணன் மீது மும்பை வெர்சோவா போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

இந்த புகார் குறித்து போலீசார் பினாய் பாலகிருஷ்ணன் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா சென்ற மும்பை போலீஸ்

இந்தநிலையில் இந்த வழக்கில் மும்பை போலீசார் ஆதாரங்களை திரட்ட கேரள போலீசாரின் உதவியை கேட்க முடிவு செய்தனர்.

இதற்காக நேற்று சப்-இன்ஸ்பெக்டர் விநாயக் ஜாதவ் மற்றும் போலீஸ்காரர் தயானந்த் பவார் ஆகியோர் கேரளாவுக்கு விரைந்தனர். கண்ணூர் சென்ற அவர்கள் அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து இந்த வழக்கு தொடர்பாக பேசினார்கள்.

இதன்பிறகு சப்-இன்ஸ்பெக்டர் விநாயக் ஜாதவ் கூறுகையில், ‘பினாய் பாலகிருஷ்ணனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் எங்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை’ என்றார்.

மேலும் செய்திகள்