வனவிலங்குகளை வேட்டையாடியவர் வீட்டில் அதிரடி சோதனை 3 துப்பாக்கி, காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல்
வனவிலங்குகளை வேட்டையாடியவர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 3 துப்பாக்கிகள் மற்றும் காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை,
வனவிலங்குகளை வேட்டையாடியவர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 3 துப்பாக்கிகள் மற்றும் காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
வனத்துறையினர் சோதனை
மும்பை சஞ்சய் காந்தி தேசிய பூங்கா வனப்பகுதியில்சென்னா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த யோகேஷ் ஜாதவ் என்பவர் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா காட்டுப் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியை கிராமவாசிகளிடம் விற்பனை செய்து வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல்
இந்த சோதனையின் போது, அவரது வீட்டில் ஒரு நாட்டு துப்பாக்கி, 2 ஏர் துப்பாக்கிகள் சிக்கின. மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த காட்டுப்பன்றியின் இறைச்சியையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த இறைச்சி ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சோதனையின் போது, வனவிலங்குகளை வேட்டையாடி வந்த யோகேஷ் ஜாதவ் வெளியில் சென்றிருந்தார். வீட்டில் சோதனை நடத்தியது பற்றி தெரிந்துகொண்ட அவர் தலைமறைவாகிவிட்டார். வனத்துறை அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர்.