புளியங்குடி அருகே வீட்டில் தூங்கிய மாமியார்-மருமகளிடம் 10½ பவுன் நகை பறிப்பு

புளியங்குடி அருகே வீட்டில் தூங்கிய மாமியார்-மருமகளிடம் 10½ பவுன் நகைகளை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-06-19 23:00 GMT
புளியங்குடி,

நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே தலைவன்கோட்டை நடு தெருவைச் சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவருடைய மனைவி திருவளர்செல்வி (வயது 29).

இவர் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். அப்போது அவர்கள், காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவு, ஜன்னல்களை திறந்து வைத்து தூங்கினர்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் முருகனின் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர், அங்கு தூங்கி கொண்டிருந்த திருவளர்செல்வியின் மாமியார் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்தார். தொடர்ந்து, திருவளர்செல்வியின் கழுத்தில் அணிந்து இருந்த 5½ பவுன் நகையையும் பறித்தார்.

அப்போது கண் விழித்த திருவளர்செல்வி ‘திருடன்... திருடன்...’ என்று கூச்சலிட்டார். உடனே கண்விழித்த திருவளர்செல்வியின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அந்த மர்மநபரை பிடிக்க முயன்றனர். ஆனாலும் அந்த நபர், நகைகளுடன் இருளில் தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில், புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் தூங்கிய மாமியார்-மருமகளிடம் நகைகளை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். வீடு புகுந்து பெண்களிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

மேலும் செய்திகள்