தாராவியில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் 3 குடிசை வீடுகள் சேதம் 6 பேர் காயம்

தாராவியில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் 3 வீடுகள் சேதம் அடைந்தன. 6 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-06-19 23:30 GMT
மும்பை, 

தாராவியில் உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் 3 வீடுகள் சேதம் அடைந்தன. 6 பேர் காயம் அடைந்தனர்.

உயர் அழுத்த மின்கம்பி உரசியது

மும்பை தாராவி சோசியல் நகர் அஷ்டவிநாயக் குடியிருப்பு பகுதியில் குடிசை வீடுகளுக்கு மேல் உயர் அழுத்த மின்கம்பி செல் கிறது. அந்த கம்பிகளை தொட்டு விடும் அளவுக்கு குடிசை வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த நிலை யில், நேற்று காலை 9 மணியளவில் உயரழுத்த மின்கம்பி ஒன்று காற்றில் அசைந்து அங்குள்ள ஒரு வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் கூரையில் உரசியது.

இதில், உயர் மின்அழுத்தம் தாங்க முடியாமல் ஆஸ்பெஸ்டாஸ் கூரை சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது.

மேலும் அந்த வீட்டையொட்டி உள்ள இரண்டு வீடுகளின் மேற்கூரையும் சிதறி வீட்டுக்குள் விழுந்தன. இதில் இடிபாடுகள் விழுந்ததில், வீட்டில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் உதவி கேட்டு அலறினார்கள்.

6 பேர் காயம்

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

விசாரணையில் காயம் அடைந்தவர்கள் சுரேஷ் கெய்க்வாட் (வயது 41), அஞ்சலி தேவி சர்மா (30), ஆனந்த் குமார் சர்மா (6), மீரா (50), வாசு பூஜாரி (56) மற்றும் கிரித்தன் பூஜாரி (22) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயர் அழுத்த மின்கம்பி உரசி வீடுகளின் மேற்கூரை உடைந்து நொறுங்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்