குழந்தை தொழிலாளா்களை பணியில் அமா்த்துபவர்கள் மீது நடவடிக்கை - நீதிபதி தமிழரசி பேச்சு

குழந்தை தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி தமிழரசி பேசினார்.

Update: 2019-06-19 22:45 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் காளையார்கோவில் ஒன்றியம் நகரம்பட்டி, அம்மன்பட்டி ஊராட்சிகளில் சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை தாங்கிய சட்டபணிகள் ஆணையத்தின் மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும், கூடுதல் மாவட்ட நீதிபதியுமான தமிழரசி பேசியதாவது:-

வறுமையின் காரணமாகவும், கல்வி அறிவு இல்லாததாலும், அதிக மக்கள் தொகையினாலும், வேலை இல்லாததாலும் குழந்தை தொழிலாளா்கள் உருவாகிறார்கள். அவர்கள் கொத்தடிமைகளாகவும், தொழிற்சாலைகளில் கடுமையான பணிகளில் உயிருக்கும், உடலுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இருக்கிறார்கள். அத்துடன் சில இடங்களில் பாலியல் அத்துமீறல்களுக்கும் உள்ளாகின்றனர். இதனால் அவா்கள் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதை தடுக்க குழந்தைகளுக்கு முறையான கல்வி அறிவு வழங்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில், பணியாளா்களின் வயதை கண்டறியும் முறை மூலம் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை தடுக்கலாம். குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். மீறினால் பணியில் அமர்த்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

கொத்தடிமைகளாக இருப்பவா்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அவா்களை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கொத்தடிமைகளாக வைத்து இருந்தவா்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குழந்தைகளை பெற்றோர்கள் கவனத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருந்தால் பெற்றோர்கள் தயக்கமின்றி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமாகவும், காவல் துறை மூலமாகவும் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது புகார் தெரிவித்தால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் குற்றங்கள் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளா் நீதிபதி ராஜேஸ்வரி பேசுகையில், போதிய கல்வி அறிவு இல்லாததுதான் குழந்தை திருமணங்கள் நடைபெற காரணமாக உள்ளது. 18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் செய்வதால் அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வரை குழந்தை திருமணங்கள் நடைபெறுவதற்கு போதிய விழிப்புணா்வு இல்லாதது தான் காரணமாகும். பொதுமக்கள், குடும்ப பிரச்சினைகள், சொத்து பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தை அணுகி பயன் பெறலாம் என்றார்.

முகாமில் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் மைவிழிச்செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் தன்னார்வலர் நாகேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் முத்துக்குமார், பூமிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்