குடிநீர் பிரச்சினை தொடர்பான பொதுமக்களின் புகார் மனுவுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உத்தரவு

குடிநீர் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகாரின் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.;

Update:2019-06-20 04:15 IST
விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம் முன்னிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுகூட்டம் நடைபெற்றது.

அதனைதொடர்ந்து ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:-

மாவட்டத்தில் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு போர்க்கால அடிப்படையில், பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆணையாளர்கள் நகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் பொதுமக்களுக்கு முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை தினசரி ஆய்வு செய்ய வேண்டும்.

அனுமதியின்றி முறையற்ற வகையில் குழாய் மூலம் குடிநீர் எடுப்பதை தடுக்க வேண்டும். அனுமதியின்றி குடிநீர் உறிஞ்சப்படும் மின் மோட்டார்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் குடிநீர் இணைப்பை துண்டித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வழங்கும் பணியில் ஊராட்சி செயலாளர்கள் தனி கவனம் செலுத்தி, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்குமாறு செய்திட வேண்டும்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தனி கவனம் செலுத்திட வேண்டும். பொதுமக்களிடமிருந்து குடிநீர் வினியோகம் தொடர்பாக வரப்பெறும் புகார்களை 24 மணி நேரத்தில் பரிசீலனை செய்து போர்க்்கால அடிப்படையில் செயல்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விருதுநகர், சாத்தூர், சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 755 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.234 கோடி மதிப்பீட்டில் நிறைவுபெற்று, தற்போது சோதனை ஓட்டப்பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.

மேலும், விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர்திட்டம் ரூ.450 கோடி மதிப்பீட்டில் விரைவில் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. திருத்தங்கல், சிவகாசி மற்றும் ராஜபாளையம் ஆகிய நகராட்சிப் பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டினை முற்றிலும் போக்கும் வகையில், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.404 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் ஆற்றுப்படு்கைகளில் தடுப்பணைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையும் விரைவு படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்