தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்

தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் விடிய விடிய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-19 23:00 GMT

ஆலந்தூர்,

கத்திரி வெயில் முடிந்தும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெப்ப காற்று வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னையை அடுத்த மடிப்பாக்கம், புழுதிவாக்கம், கீழ்க்கட்டளை போன்ற பகுதிகளில் குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் தினமும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வழக்கம்போல் அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 11.30 மணி ஆகியும் மின்சார வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மடிப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அங்கிருந்த மின்வாரிய ஊழியர்களிடம், தினமும் இரவு நேரத்தில் மின்சாரம் தொடர்ந்து தடை செய்யப்பட்டு, அதிகாலையில் தான் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் எந்த வித தடையும் இன்றி மின்வினியோகம் செய்யப்படுவது எப்படி? என கேள்வி எழுப்பினர்.

ஆனால் பொதுமக்களின் கேள்விக்கு அங்கிருந்த மின்வாரிய ஊழியர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. உடனே பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மடிப்பாக்கம் போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு பொதுமக்கள், ‘‘ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தினமும் இரவு–பகலாக தண்ணீருக்கு அலைந்து வருகிறோம். இரவில் வீட்டுக்கு வந்தால் மின்சார தடையால் குழந்தைகள் உள்பட யாரும் தூங்க முடியாமல் தவிக்கிறோம். காரணம் கேட்டால் மின்வாரிய ஊழியர்கள் சரியான பதில் சொல்வதில்லை. எங்கள் பகுதிக்கு மின்சாரம் வரும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்று கூறி விடிய விடிய மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அதிகாலை 4 மணிக்கு மின்சார வினியோகம் சீரானது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்