பத்மஸ்ரீ-ஜீவன் ரக்‌ஷா பதக்க விருது பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்

பத்மஸ்ரீ-ஜீவன் ரக்‌ஷா பதக்க விருது பெற விண்ணப்பிக்கலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-19 22:30 GMT
கரூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இதில் கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசுதின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க இந்திய அரசு அறிவித்துள்ளது. இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் இந்த விருதினை பெற தகுதியுடையவர்கள், www.pa-d-m-a-aw-a-rds.go.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து இன்றுக்குள் (வியாழக்கிழமை) தாந்தோன்றிமலையிலுள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதே போல், இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் முழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச் சரிவு, விலங்கினை தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் பிரிவுகளில் “ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுகள்” வழங்கப்படுகிறது. சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. உத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக்கம் துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கும் தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி போராடி உயிரைக் காப் பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

அதன்படி 2020-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பத்தை கரூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய நபர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்திற்கு ஜூலை 1-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்