அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: வணிகவரித்துறை அலுவலக டிரைவர் கைது

கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வணிகவரித்துறை அலுவலக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-06-19 23:00 GMT
கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை கிராமம் வெங்கக்கல்பட்டியை சேர்ந்தவர் சுந்தரவடிவேல் (வயது 50). இவர், தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றிய தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த டிவன்காந்த் (39) எனது மனைவிக்கு அரவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2017-ல் ரூ.5 லட்சம் பெற்றார். ஆனால் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்த போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.

எனவே அந்த நபர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் கடந்த 12-ந்தேதி, இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கரூர் வெங்கமேடு வி.வி.ஜி. நகரை சேர்ந்த விஸ்வநாதன் (44) என்பவர் தனது மகனுக்கு டி.என்.பி.எல். காகித ஆலையில் வேலை வாங்கி தருவதாக கூறி டிவன்காந்த் ரூ.5 லட்சம் பெற்று ஏமாற்றியதாக கரூர் டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்ததன் பேரிலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது டிவன்காந்தை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் கரூர் பகுதிகளில் 18-க்கும் மேற்பட்ட நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியது தெரிய வந்தது. மேலும், பிறரை ஏமாற்றி பெற்ற பணத்தில் தாந்தோன்றிமலை ராஜா நகர் பகுதியில் சொகுசு வீடு ஒன்று கட்டி வருவதும், சொகுசு கார்கள் வாங்கி கொண்டு உலா வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் டிவன்காந்த், தமிழ்நாடு அரசு எஸ்.சி.-எஸ்.டி. நல அலுவலர்கள் சங்கத்தில் கரூர் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இதையடுத்து கரூர், தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின்பேரில் டிவன்காந்த் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்