பண்ருட்டியில் லாரி மோதி தொழிலாளி பலி
பண்ருட்டியில் லாரி மோதி தொழிலாளி பலியானார்.
பண்ருட்டி,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கருவேப்பிலைபாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50), தொழிலாளி. இவரது மனைவி கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சேகர் பண்ருட்டிக்கு வந்து தனது மனைவியை பார்த்து விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு செல்வதற்காக பண்ருட்டி பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்றார்.
பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று சேகர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சேகர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.