துமகூரு மாவட்டத்தில் ஹேமாவதி இணைப்பு கால்வாய் அமைப்பது குறித்து எம்.எல்.ஏ.க்களுடன், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை

துமகூரு மாவட்டத்தில் ஹேமாவதி இணைப்பு கால்வாய் அமைப்பது குறித்து எம்.எல்.ஏ.க்களுடன், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-06-19 22:30 GMT
பெங்களூரு, 

துமகூரு மாவட்டத்தில் ஹேமாவதி இணைப்பு கால்வாய் அமைப்பது குறித்து எம்.எல்.ஏ.க்களுடன், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தினார்.

இணைப்பு கால்வாய்

துமகூரு மாவட்டத்தில் ஹேமாவதி கால்வாய்க்கு இணைப்பு கால்வாய் அமைப்பது மற்றும் எத்தினஒலே குடிநீர் திட்டத்திற்கு தொட்டபள்ளாப்புரா மற்றும் கொரட்டகெரே தாலுகாக்களில் 5,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

இந்த நிலத்திற்கு விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

மந்திரிசபை துணை குழு

இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

துமகூரு மாவட்டத்தில் ஹேமாவதி அணை கால்வாய் மூலம் அனைத்து தாலுகாக்களுக்கும் நீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஹேமாவதி அணை கால்வாய்க்கு இணைப்பு கால்வாய் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதுகுறித்து எம்.எல்.ஏ.க்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். இந்த கருத்துகள் குறித்து அறிக்கை தயாரித்து, மந்திரிசபை துணை குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். இதுபற்றி அந்த குழு இறுதி முடிவு எடுக்கும்.

சமமான விலை

எத்தினஒலே குடிநீர் திட்டத்திற்காக தொட்டபள்ளாப்புரா மற்றும் கொரட்டகெரே தாலுகாக்களில் 5,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த நிலத்திற்கு சமமான விலை கொடுக்க வேண்டியது அவசியம்.

தொட்டபள்ளாபுரா நிலத்திற்கு அதிக விலையும், கொரட்டகெரே நிலத்திற்கு குறைவான விலை நிர்ணயம் செய்வதும் சரியல்ல. இதுகுறித்தும் அறிக்கை தயாரித்து மந்திரிசபை துணை குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்